Wednesday, December 03, 2008

எம்மினமே… எம்சனமே…


வாழ்வில் எத்தனை போராட்டங்கள், எத்தனை சோதனைகள், எத்தனை ஆண்டுகள்… இன்றும் எம்மவர் தாயகத்தின் காற்றை சுவாசித்தபடி போரின் கோரத்தை வாசித்தபடி உண்பதற்கு உணவின்றி உடுப்பதற்கு உடையின்றி அகதிகளாய் வீதியிலே அலைகின்றனர். மீண்டும் மீண்டும் இந்த வேதனைகளைத் தாங்குகின்ற உள்ளங்களின் நெஞ்சுரத்தை பாராட்டுவதா? சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டு கண்ணீர் விடுவதா என்று தெரியவில்லை.


புலம்பெயர்ந்து வாழ்கின்ற நாமோ, வருடத்திற்கு ஓர் தடவை எம் நாட்டு அரசை குறிவைத்து கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்துகிறோம். நிகழ்வுகள் வைத்து தாயகத்திற்கு நிதியுதவி அளிக்கின்றோம். ஆராயந்து பார்த்தால் எம்மால் முடிந்தது அவ்வளவுதான். முப்பது ஆண்டுகளாய் தமிழினம் புலம்பெயர்ந்து வெளிநாட்டிலேயே பிறந்த தமிழ் தெரியாத தலைமுறையும் உருவாகிவிட்டது. வருகின்ற நாட்களில், அதாவது இன்னும் ஓர் தலைமுறை இடைவெளியில் இந்த முயற்சிகளை முன்னெடுப்பதற்கும் தாயக உறவுகளுக்கும் யார் இருக்கப்போகிறார்கள். இதற்கு எமக்கு உடனடியாக அமைதி வேண்டும்.



போரற்ற தாயகத்தை கண்டிராத தலைமுறையாக நாம் வாழ்ந்து விட்டோம். பெற்றோரும் மற்றோரும் யாழ்தேவி அனுபவங்களையும் தம் பாடசாலை நாட்களையும் சொல்லும்போது நாம் எதையோ இழந்துவிட்டோமோ என்று எண்ணத்தோன்றும். பனையோடு உறவாடி செம்மண்ணோடு விளையாடிய பொழுதுகளை நாம் பெறமுடியாது. இயந்திர வாழ்விலே இயற்கையோடு உறவாட எமக்கு நேரமேது? ஆனாலும் எம் தாயகத்திலே அமைதி நிலவி அங்கும் சமாதானப் புறாக்கள் பறக்கவேண்டும் என்ற ஆசை என்றும் நெஞ்சிலே இருக்கிறது.


ஓர் காலத்தில் படிப்பிலும் தொழில்நுட்பத்திலும் விஞ்சி நின்ற தமிழினம் இன்று இருப்பதற்குகூட இடமில்லாத இனமாக மாறியிருக்கிறது. கணணியைக் காணாத தலைமுறை உருவாகியிருக்கிறது. படிப்பதற்கு வாய்ப்பற்ற குழந்தைகள் எவ்வாறு எம் தாயகத்தைக் கட்டியெழுப்ப முடியும் ? மனத்தளவில் சின்னாபின்னமாக்கப்பட்ட எதிர்காலத் தலைமுறை எவ்வாறு சமுதாயக் கட்டமைப்பை உருவாக்கமுடியும்? போர் ஓய்ந்தாலும் எம் தாயகத்திற்கு பல உதவிகளும் நிச்சயமாகத் தேவை.



முதலில் எம் தாயக மக்களின் விடிவிற்கு கேடுகெட்ட அரசியல் வழிவிடுமா? வேற்றுமைகளை மறந்து ஒற்றுமை கனியைக் கொய்ய அரசியல்வாதிகள் முயலவேண்டும். இன்னும் எவ்வளவு காலம்தான் போராட்டச் செய்திகளையும் மக்களின் அகதி வாழ்வைப் பற்றியும் செய்திகளைக் கேட்பது? இந்த நிலை மாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும். அழகான விழுதாக அமைதி இடப்பட்டு மாபெரும் விரூட்சமாக வளரட்டும்.

Tuesday, December 02, 2008

நாடகம் போட ஐடியா வேணும்

UTS தமிழ்ச் சங்கத்தின் கதம்பமாலை 2009 வருகின்ற வருடம் (வருகின்ற மாதம்) 17ம் திகதி நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்வில் கடந்த வருடம் “21ம் நூற்றாண்டில் கரிகாலசோழன்” என்ற நாடகத்தை அரங்கேற்றியிருந்தோம். சரி விஷயத்துக்கு வருவோம்.

இந்த வருடமும் ஓர் நாடகம் போடலாம் என்று யோசித்து ஒரு கதை தேடிக்கொண்டிருக்றேன். தமிழர்களின் மாப்பிள்ளை தேடுகின்ற (மாப்பிள்ளைக்கு விலைபேசி வாங்குகின்ற) விடயத்தை நகைச்சுவையாக அணுகலாம் என்று நினைத்து ‘கதை விவாதம்’ செய்தபோது அந்த கருவில் நாடகத்தை அரங்கேற்றுவது கடினமென்று அதைக் கைவிட்டு விட்டோம்.

பழைய குருடி கதவை திறவடி என்பது போல திரும்பவும் கதை தேடும் படலம் ஆரம்பித்திருக்கிறது. தமிழர்களின் தொலைபேசியில் பேசுகின்ற பழக்கத்தை சற்றே சீண்டிப்பார்போம் என்ற ஒரு ஐடியா இருக்கிறது. உங்களுக்கும் ஏதாவது ஐடியா அல்லது script இருந்தா உங்களுக்கு புண்ணியமா போகும்.