சிகரத்தில் இல்லம்கொண்டு
கலைவாணியும் தலை நாண
கம்பன் கவிகள் உனைப்பாட
பிரம்மனும் வியந்து படைத்த
பெண்ணழகே பேரழகே
காற்றோடு விளையாட மரமுண்டு
காலத்தோடு உறவாட வயதுண்டு
கண்களோடு இசைபாட நிலவுண்டு
காதலோடு எனைப்பாட நீயின்றி
இவ்வுலகில் யாருண்டு
ஏழுகடல் ஏழுமலை தாண்டிவரவா
எதிரியையும் நண்பனாய் மாற்றிவிடவா
உலகத்தையே உனக்காய் சுற்றிவரவா
உயிரோடு முக்தி அடைந்துவிடவா
உன்னை நினைக்காத ஓர்நொடி
இல்லாமல் நாட்கள் நகருதடி
உறங்கும்போதும் உளறுகின்றேன்
இரவினில் எழுந்து தேடுகிறேன்
வறுமைக்கு முடிவு செல்வத்தில்
வானுக்கு முடிவு ஆழ்கடலில்
வாழ்வுக்கு முடிவு மரணத்தில்
எந்தன் பயணத்தின் முடிவு
உந்தன் விழியோர கருமையில்
