இந்த நாடகம் கதம்பமாலை நிகழ்வில் அரங்கேறி பலருடைய வரவேற்பையும் பெற்றது.
வாழ்க்கைக்கும் Laptopக்கும் என்ன தொடர்பு என்று நீங்களும் நினைக்கலாம். Laptopஐ போல வாழ்க்கையும் எம்மடி மீதுதான் விளையாடிக் கொண்டிருக்கிறது. அதை சிறப்பாக அமைப்பதும் அழிப்பதும் எம் கையில்தான் இருக்கின்றது. ஒரு laptopஐ நாம் எடுத்து நோக்கினால் அதன் சீரான இயக்கத்திற்கு நல்ல hardware தேவை, அது போல வாழ்க்கை சிறப்புற நல்ல உறவுமுறைகள் தேவைப்படுகின்றன. laptopஐ தாக்கும் Virus போல குடும்பத்திலே ஏற்படுகின்ற பிரச்சினைகள் எம்மை ஆட்டம் காணவைக்கின்றன. Facebook, MSN messenger போல காதலும் எம்மை அடிமைப்படுத்தும். திருமணத்தில் divorce எம் வாழ்வை தகர்த்தெறியும் hardware failure போல, அதனால் எம் வாழ்க்கையை சீராகவும் சந்தோசமாகவும் மாற்றியமைக்கும் பொறுப்பு எம் கையில்தான் உள்ளது.
நடிகர்கள்
நாயகன்: ஜெயந்தன்
நண்பன்: கோகுலன்
அப்பா: செந்தூரன்
அம்மா: சிந்து
வயோதியர்: துஷி
நாயகி: விது
காட்சி 1
திரை விரிதல். "எங்கேயும் எப்போதும்" பாடல் ஒலிக்கின்றது. கதவு தட்டப்படல்.
நண்பன்: ஹலோ... அடேய்... என்ன செய்யுறாய்? எப்பிடி இருக்கிறாய் மச்சான்?
கதாநாயகன்: hey mate, how is it goin'?
நண்பன்: பெரிய பிரபுதேவாட கசின் பிறதர் மாதிரி ஆட்டத்தை பாருங்க... பார்க்கப் பண்டிக்குட்டி மாதிரி இருந்து கொண்டு..
கதாநாயகன்: பண்டிக்குட்டி மாதிரி இருந்தாலும் எனக்குப் பின்னாலதான் எல்லா பெட்டையளும் வர்ராங்க.
ந: சரி விடு விடு... என்ன ஆட்டம் பாட்டமா வெளிக்கிட்டுக் கொண்டிருக்கிறாய்.
க: இல்ல மச்சான், last weekend clubல போய் ஆடின ஆட்டத்த கொஞ்சம் நினைச்சுப் பார்த்தன்... என்ன music...எத்தின girls... I am still not over it... சும்மா Pontoona ஒரு கலக்கு கலக்கிட்டம்ல...
ந: Pontoona? அங்கதானே நம்மட தமிழ் பெட்டயளும் பெடியளும் Friday Night, Saturday Night எண்டால் அம்மாக்கும் அப்பாக்கும் Friendida Birthday Party எண்டு சொல்லிட்டுப் போறது. அது சரி, நீதான் ஒரு நாளைக்கு ஒரு girlfriend வைச்சிருக்கிற ஆளாச்சே? உருப்படியா ஒரு girl friend மாட்டியாச்சா?
க: இந்த கேள்ஸ் எல்லாம் சும்மா... பார்த்தமா பழகினமா எண்டு... ஒண்டும் வாழ்க்கைக்கு சரி வராது... just dating... dancing... and dropping...
ந: ஏண்டா இப்பிடி இருக்கிறாய்? பெண்கள கண்களா பார்க்க வேணும்... கண்டவளோடையும் சுத்திட்டு வேறொருத்திய கல்யாணம் பண்ணுறது கேவலம். ஒருத்திய காதலிச்சு ஒருத்திய கை பிடிக்கிறது தாண்டா எங்கட கலாச்சாரம்...
க: கலாச்சாரமும் கத்தரிக்காயும். இப்போதைக்கு lifeஅ enjoy பண்ணவேணும்.. பிறவு ஒரு குலவிளக்கா அம்மா பார்த்து தருவா.. கல்யாணம் பண்ணிட்டு settle பண்ணவேண்டியதுதான். இதுதான் எண்ட policy.
(யாரோ கதவைத் தட்டல், knock knock knock, வயோதியர் உள்நுழைதல்)
வயோதிபர்: ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா வாழ்க்கை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா..
க: என்ன இது? எங்கட வீட்டுக்குள்ள வந்து யாரோ ஒப்பாரி வைக்கினம்.
வ: தம்பி தம்பி... எப்பிடியிருக்கியள்? நான் யாரெண்டு தெரியுதே?
க: ஓ... நல்லா தெரியுதே... யாரையோ இலங்கைல கொலை செய்ததுக்காக அவுஸ்ரேலியாவுக்கு அடிச்சுக் கலைக்கப்பட்ட ஆள் நீங்கதானே? இல்லாட்டி வேறாக்கள்ட சொத்த வித்திட்டு அந்தக்காசில boat ஏறி வந்தனிங்களே?
வ: இல்லை தம்பி, நான் உண்ட அப்பாட அந்தக்காலத்து சிநேகிதன்... நீ பிறந்தோன உனக்கு பெயர் வைச்சதே நான்தான்... ஞாபகமில்லையோ?
க: அது சரி.. நானென்ன? ஞானசம்பந்தரா? பிறந்தோன நடந்ததெல்லாம் நினைவிருக்க.. எண்ட பேர் நீட்டா இருக்கெண்டு எண்ட girl friends complaint பண்ணிச்சினம். அப்பவே இந்த நீட்டு பேர வைச்சது யாரெண்டு நான் தேடிக்கொண்டிருந்தனான். இண்டைக்குத்தான் மாட்டியிருக்கியள்.
வ: உண்ட பேர் ஒரு பிரச்சினையே இல்லை, காண்டீபன் எண்ற பேர காண்ஸ் எண்டு வைக்கவேண்டியதுதானே சாரங்கன் எண்டால் சாக்ஸ் எண்டு வைக்கிறது தானே... Just make it short and sweet... அப்பா எங்க? தொலைக்கே பொயிற்றார்?
( அப்பா உள்நுழைதல் )
வ: அந்த நாள் ஞபாகம் வந்ததே... நண்பனே நண்பனே... அந்த நாள் இன்றுபோல் இல்லையே நண்பனே நண்பனே...
அப்பா: யாரிந்த கிறிஸ்மஸ் சான்ரா? அந்தநாள் எப்பவுமே இந்தநாளை விட நல்லந்தான் ( மனைவியைப் பார்த்தபடியே) உங்கள எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு...
வ: என்னப்பு? நானும் நீயும் ஒண்டா நல்லூர் போயிலுக்கு போய் கச்சான் கடல வாங்கித் தின்னுவமே....... பெம்பிள பிள்ளையளுக்கு ஸ்ரைல் காட்ட சைக்கிள்ள போய் விழுந்தமே? மறந்து போச்சா? நான்தான் சுப்பிரமணியம். உங்கட வீட்டுக்குப் பின்னால இருந்தனே... சுப்பு..
அ: எங்கட வீட்டுக்குப் பின்னால toiletதான் இருந்தது. நல்லூர் கோயிலுக்கு ஒண்டா போனது எண்டால் (யோசித்து விட்டு ) அட... நம்மட சுப்பு... மச்சான், எப்பிடியிருக்கிறாய்... கண்டு கனகாலம் ஆச்சு....
வ: ஓமடா... கதைக்கிறதுக்கு எத்தின விஷயம் கிடக்கு. அத தொடங்கினால் அதுக்கெண்டு இன்னொரு கதம்பமாலையே வேணும்... விஷயத்துக்கு வருவம்... எங்க உன்னைப் பிடிக்கிறது இவ்வளவு கஷ்டமா இருக்கு.
அ: ஒண்டுமில்ல சுப்பு, இந்த வருஷம் எங்கட பள்ளிக்கூடத்திட பழைய மாணவர் சங்கத்திட சிட்னி கிளைக்கு நான்தான் தலைவர். எத்தின politics? எத்தின பகை? எல்லாத்தயும் சமாளிச்சு தலைவர் ஆகிறதுக்குள்ள வெறுத்துப்போச்சு... குடும்பத்தப்கூட பார்க்க no time.
வ: சிட்னிக்கு வந்தாலும் தமிழன் மாறமாட்டான். பத்துப்பேர் சேர்ந்தா சங்கம். இருபது பேர் சேர்ந்தா கழகம். பிறகு ஒரு program நடத்தவேண்டியதுதானே... பிறகு எப்பிடி குடும்பத்துக்கு நேரம் இருக்கும்? மகனை பார்க்கவே தெரியுது.. என்ன ஒரு பண்பு? என்ன ஒரு மரியாதை? கேவலம்.
அம்மா: ஓம் அண்ண.. எங்களுக்கும் இவனைப் பற்றித்தான் கவலை. இரவிரவா கோயிலுக்கு போறன், birthday பார்ட்டிக்கு போறன் எண்டு சொல்லிட்டு ஒரு மார்க்கமாத்தான் வீட்ட வாறான். இவனுக்கு ஒரு கல்யாணத்தைக் கட்டிக்கொடுத்தி்ட்டா எண்ட பொறுப்பு தீந்திடும். ஏதாவது பெம்பிள இருந்தா சொல்லுங்களேன்.
வ: எனக்குத் தெரிஞ்ச கொஞ்ச பிள்ளையள் இருக்குது. ஆனா உங்கட மகனுக்கு எப்பிடி பிள்ளை வேணுமோ தெரியாது... இவன் என்ன வேலை செய்யுறான்?
அம்மா: என்ர மகன் Computer engineer. படிச்சவன். நல்ல ஒரு கம்பியுட்டர் வேலைல இருக்கிறான். அவனுக்கு அடக்கமா ஒடுக்கமா அழகான வெள்ளையான English Speaking குலவிளக்கு மாதிரி ஒரு பெம்பிள வேணும். யாரையாவது தெரியுமே?
வ: அப்பிடியா... எனக்குத் தெரிஞ்ச engineer ஒருத்தன்ட மகள் இருக்காள். நீ சொன்ன மாதிரியே இருப்பா. பேசுவமா? பொருந்தினா கல்யாணந்தான். அப்ப நான் பொயிற்று வரட்டே?
அப்பா: அப்பாடா... எனக்கு இருந்த பெரிய பொறுப்பு தீர்ந்துது... தாங்ஸ் சுப்பு... அடிக்கடி இங்கால பக்கம் வா...
(ஜாதகங்கள் மட்டும் பொருந்துகின்றன... கல்யாணம் முடிகிறது... நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுகாக நாட்கள் விரைந்தோடி பெம்பிளயும் அவுஸ்ரேலியா வந்து சேர்கிறாள்)
காட்சி 2
(திரை விலகிறது, அப்பா பேப்பர் வாசித்துக் கொண்டு இருக்கிறார். மகன் தொலைக்காட்சியில் Cricket பார்த்துக்கொண்டிருக்கிறார் )
அ: தம்பி, விஷயத்தை கேட்டியே... கிளிநொச்சிக்கு 150000 கிடுகுகள அரசாங்கம் அனுப்பியிருக்காம்.
க: அப்பா, don’t disturb me. I am watching the cricket. Mitchell Johnson 9 விக்கட்ட கழட்டிட்டான்... நீங்க அதவிட்டிட்டு கிடுக பற்றியும் கடுக பற்றியும் கதைச்சுக் கொண்டு...
அம்மா: இந்தக் கண்டறியாத கிறிகட்ட எந்த நேரமும் பாத்துக் கொண்டு... நான் அவசரமா "கோலங்கள்" நாடகம் பார்க்கவேணும். அபிக்கு accident நடந்து போச்செல்லே, அதுக்குப் பிறகு என்ன நடந்தது எண்டு தெரியல்ல...
(பெண் அரங்கத்திற்குள் நுழைதல்)
பெ: இஞ்சே... இப்ப UTS Universityla புதுசா இங்க வந்த ஆக்களுக்காக ஏதோ English Course for Computers நடக்கப்போகுதாம். அதுக்கு நான் enrol பண்ணட்டே?
க: என்னது? நீ படிக்கப்போறியோ? எங்களுக்கெல்லாம் English தெரியும்தானே... எங்கள்ட இருந்து படிக்கவேண்டியதுதானே?
பெ: ஆனாலும் Universityக்கு போய் படிக்கைக்க ஒழுங்கா சொல்லித்தருவாங்கள், அதோட computer படிச்சமாதிரியும் ஆகிடும்.
அம்மா: நீ கல்யாணம் கட்டி வாழ வந்தனியோ? இல்லாட்டி படிக்க வந்தனியோ? உண்ட அம்மாக்கு போன் போடட்டே?
பெ: அப்பிடியில்ல, எனக்கும் வீட்ட இருக்க Bore அடிக்குது. நானும் படிச்சா உங்களுக்கும் mortgage கட்ட உதவியா இருக்கும். உங்களுக்கும் நிரந்தரமான வேலையும் இல்லை, ஏதோ என்னால ஆன உதவிதானே?
க: எனக்கு நிரந்தரமான வேலையில்லாதத நீ சுட்டிக்காட்டுறாய். என்ன? கல்யாணம் பேசைக்க ஏதோ ஒண்டும் தெரியாத குலவிளக்கு மாதிரி இருந்திட்டு இப்ப வாயைப் பாரன். வங்காள விரிகுடா மாதிரி..
பெ: நீங்க மட்டும் என்னவாம்? பெரிய computer engineer எண்டு சொல்லித்தானே உங்கள கல்யாணம் பேசினவயள். எங்கட அம்மா அப்பாவும் engineer மாப்பிள்ளையெண்டு மயங்கி கட்டிக்குடுத்தா உங்களுக்கு engineering எண்டாலே என்ன எண்டு தெரியாது. உங்களிலும் பார்க்க நான் எவ்வளவோ மேல்.
க: வேலைய பற்றிக் கிண்டலடிச்சிட்டு இப்ப எண்ட படிப்பப் பற்றியே கதைக்கிறியா? நீ ஏதோ நிறைய படிச்சு கிளிச்ச மாதிரியும் உங்கட குடும்பம் பெரிய ராஜகுடும்பம் மாதிரியுமல்லோ?
பெ: எண்ட குடுப்பத்த பற்றி கதைக்காதைங்க... நானாவது Advanced level பாஸ் பண்ணினன். நீங்க HSCஉம் fail பண்ணிட்டிங்க.
க: ஆனாலும் UNIல சேர்ந்து படிச்சிட்டன். Australiaல படிச்சு டிகிரி முடிக்கிறது முக்கியமில்ல, மனிசனா நடக்கிறதான் முக்கியம்.
பெ: மனிசனா நடக்கிற ஆள பாருங்க. நான் அம்மாவோட அஞ்சு நிமிசம் போன்ல கதைச்சா உங்களுக்கு பொறுக்காதே. காசு போகுது காசு போகுது எண்டு கத்திக் கத்தியே எண்ட காது கிளிஞ்சு போச்சுது. கஞ்சப் பிசினாரி மாதிரி..
க: அது உங்கட அப்பன் வீட்டுக்காசா? அப்பன் தந்த சீதனத்தில கதைக்கிற மாதிரி...
பெ: நீங்கதானே... அவள மட்டும் அனுப்பி வையுங்கோ எண்டு hero மாதிரி கதைச்சி்ட்டு இப்ப கேவலமா சீதனத்த பற்றி கதைச்சுக்கொண்டு இருக்கிறீங்கள். ஆம்பிள எண்டால் கட்டின பொண்டாட்டிய காப்பாத்த தெரியவேணும்.. நான் கொணந்த காசைக்கூட bankla வாங்கிப்போட்டு வட்டியெடுக்கிற நீங்களெல்லாம்.. சீ து ஒரு ஆம்பிளயா?
அம்மா: கடசியா எண்ட மகன ஆம்பிள இல்லை என்றியா? உன்னைக் கட்டினதுக்கு அவனுக்குத் தேவை. அங்க இருக்கிற ஒரு பிள்ளைக்கு வாழ்வு குடுப்பம் எண்டால் நீ அவண்ட வாழ்வையே அழிக்க வந்த அரக்கி...
பெ: என்ன அரக்கியெண்டிட்டு நீங்களெல்லாம் வாழ்வு குடுத்த தியாகி ஆக try பண்ணுறிங்களோ? நீங்க எல்லாரும்தான் மனசே இல்லாத பிசாசுகள்..
க: எங்களையே இப்பிடி சொல்லுற உன்னோட நான் இனி வாழ ஏலாது. புருசனே மதிக்கத் தெரிய வேணும்.. உன்னை .... என்ன செய்வன் எண்டு எனக்கே தெரியாது... விவாகரத்து வாங்கி இலங்கைக்கு அனுப்பாட்டி நான் ஆம்பிள இல்லைடி...
பெ: இப்பிடியான ஒரு மிருகத்தோட இருக்கிற நேரம் இலங்கைக் போறதே மேல்... விட்டுது பிசாசு எண்டு...
( கதவு தட்டப்படல், வயோதிபர் உள்நுழைதல் )
வ: தம்பி தம்பி... என்ன நடக்குது? வீட்டில உலகப்போர் நடக்கிற மாதிரி இருக்குது... ஊடல் மோதல்லதான் தொடங்கும்.. ஆனா இது சாதல்ல முடியிற மாதிரி சத்தம் கேக்குது...
க: வாங்க அங்கிள், இவள கல்யாணம் பேசின நீங்களே அவள்ட அம்மாட்ட அனுப்பிருங்க... எனக்கு இவள் வேணாம்... நான் விவாகரத்து வாங்கப் போறன்...
வ: என்னது.. நீ நினைச்சோன விட்டுட்டு போக இதொண்டும் உண்ட girl friend - boy friend relationship இல்லை. சொந்தத்தத்த கூட்டி பந்தல் போட்டு நாள் நேரம் பாத்து செஞ்ச கல்யாணம். விளையாட்டில்ல. வீட்ட நெச்சோன அனுப்ப அவ parcel post இல்லை.
க: ஆனா இவளோட இருக்க முடியாது அங்கிள். எதுக்கெடுத்தாலும் வாய். மதிப்புக் குடுக்கிறா இல்ல. குலவிளக்கா இருப்பா எண்டு இலங்கைல இருந்து கல்யாணம் செஞ்சா குத்துவிளக்கா எரிக்கிறா... தாங்க முடியல
பெ: அங்கிள்... எத்தினையோ பொய் சொல்லி கல்யாணம் செய்திட்டு என்ன ஊமையா அடக்கி வைக்கப்பாக்கினம். இவர் எதிர்பார்க்கிற மாதிரி குலவிளக்கு எண்டு எனக்குத் தெரிஞ்ச ஒரே ஒரு பெம்பிள சங்ககால ஓளவையார் தான்...
வ: இது குடும்மமா? இல்ல flemington marketa? முதல்ல ஆளையாள் குறை சொல்லுறத விட்டுட்டு சமாதானமா கதைக்கப் பழகுங்க. Arranged marriage எண்டால் வேற சூழல்ல வளர்ந்த இரண்டு பேர் சேர்ரதால இரண்டு பேரும் ஒரே மாதிரி இருக்கமாட்டாங்க. பரஸ்பர புரிந்துணர்வு இருக்க வேணும்.
பெ: புரிந்துணர்வுக்கு முதல்ல நான் என்ன செய்தாலும் இவர் தலையிடுறார். Telephone கதைக்க விடுறாரில்ல, படிக்க விடுறாரில்ல, வேலைக்கு விடுறாரில்ல. கிட்டத்தட்ட சம்பளமில்லாத வேலைகாரி மாதிரி நடத்துறாங்க.
வ: தம்பி, இதெல்லாம் domestic violence எண்டு சொல்லுறது. குடும்ப வன்முறை. பெண்ணை துன்புறுத்திறது சட்டப்படி தவறு. நீ இங்கயே இருந்த பிள்ளை. இது கூட தெரியாதா?
க: அங்கிள், ஆனா எதுக்கெடுத்தாலும் வாய்க்கு வாய் கதைச்சுக்கொண்டு இருக்கா. பெம்பிள எண்டால் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, கத்தரிக்காய், புடலங்காய்.. ஒண்டும் வேண்டாமா?
வ: பிள்ள, புருஷனோட எல்லாத்துக்கும் சண்ட பிடிக்கிறதும் எதிர்த்தும் கதைக்கிறதும் சரியில்ல... தெரியுந்தானே... அதே நேரமும் மனிசிய மதிச்சு ஒத்து நடக்கத் தெரிய வேணும்... அவயள்ட உணர்வுக்கு மதிப்பும் குடுக்கோணும்... ஒரு laptopல Hardwareஉம் softwareஉம் போல.. பிள்ளயள் நீங்கள் ரெண்டு பேரும் சேர்ந்திருந்தால்தான் வாழ்க்கைய நல்லா கொண்டு செல்லமுடியும்.
அ: சுப்பு...நீயொரு சுப்பர் சுப்பு... இத துணிஞ்சு சொல்ல முடியாமல்தான் நான் கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்தனான். ஆனா.. நீ சொல்லிட்டா... நீங்க ரெண்டு பேரும் ஆளுக்காள் மதிப்புக் குடுத்து கதைச்சு சந்தோசமா வாழப் பழகுங்க. இல்லாட்டி நானே பொலிஸை கூப்பிட்டு கம்பி எண்ணச் செய்திடுவன். நீ வா, சும்மா நாரதர் வேலை பார்க்காம...
பின்னுரை: வணக்கம். இந்த நாடகத்தில பார்த்தது போல கணவன்- மனைவிக்கிடையே குடும்ப வன்முறை, அதாவது domestic violence நடக்கிறது எங்கட சிட்னி தமிழ் சமூகத்தில கூடிக்கொண்டே போகுது. பலரும் தாக்கப்பட்டிருக்கிறார்கள். ஓர் சில பெண்களை கணவர்கள் அடித்தும் கொன்றிருக்கிறார்கள். இதனால பாதிக்கப்படுறது கணவனும் மனைவியும் மட்டுமில்ல, குழந்தப் பிள்ளைகளும்தான். அவர்களுடைய எதிர்காலம் பாதிக்கப்படுது, மனதளவிலயும் பாதிக்கப்படுகிறார்கள். ஒஸ்ரேலியாவில மனைவியை கெட்ட வார்த்தையால ஏசுறதோ அடிக்கிறதோ சட்டப்படி குற்றம். கணவன் மீது கடிமான நடவடிக்கையை காவல்துறை எடுக்கும். அதோட இங்க பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு வழங்க பல நிறுவனங்களும் இருக்குது. ஆனாலும் எங்கட கலாச்சாரத்தின்படி கணவனும் மனைவியும் சேர்ந்திருக்கிறதான் விரும்பத்தக்கது. அதனால இருவரும் பிரச்சினை மனம் விட்டு பேசி ஆளுக்காள் மரியாத குடுத்து மகிழ்ச்சியா இருங்க. வாழ்க்கை ஒரு laptop மாதிரி, அத கவனமா கையாண்ட சந்தோசம் எங்கள் கையில். நன்றி வணக்கம்.
No comments:
Post a Comment