[ UTS தமிழ்ச்சங்கத்தின் ஆண்டு மலருக்காக எழுதப்பட்ட ஆக்கம் தெரிந்தோ தெரியாமலோ வெளியிடப்படவில்லை. அதனை கீழே பிரசுரம் செய்கிறேன்... ]
வருடங்கள் உருண்டோடும் வேளையிலே, மீண்டும் UTS தமிழ்ச்சங்கத்தின் கதம்பமாலை 2007 நிகழ்வில் ஓர் அங்கமாக இருந்ததில் மகிழ்வடைகின்றேன். மெல்லத்தமிழ் இனிச்சாகும் வேளையிலே, இள இரத்தங்கள் தமிழுடன் இணைந்திருப்பது, தமிழால் இணைந்திருப்பது ஆனந்தத்தைத் தருகிறது. கடந்த ஆண்டுகளில், இன்பங்களையும் துன்பங்களையும் களைந்தெடுத்து இளைஞர்களாய் ஒன்றிணைந்து பற்பல கலைநிகழ்வுகளை வழங்கியிருந்தோம். கடந்து வந்த பாதையிலே கண்ணீரின் சுவடுகளை சிற்பமாக செதுக்கியிருக்கிறோம், தடைக்கற்களை படிக்கற்களாக்கியிருக்கிறோம். இந்த வருடமும் இனியதோர் நிகழ்வாக கதம்பமாலை உங்களை மகிழவைக்க இருக்கிறது.
இந்த வருடம், வழமைக்கு மாறாக நாடகத்தமிழ் மூலம் உங்களுக்கு விருந்தளிக்க இருக்கிறேன். முதன்முறையாக நெறிப்படுத்துகின்ற நாடகம் என்பதானால் பிழைகளைப் பொறுத்தருளி ஆதரவளிப்பீர்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. நாம் கருவாக எடுத்திருக்கும் விடயம் கரிகாலன், நீதிக்கும் வீரத்திற்கும் பெயர்போன கரிகாலனை எவ்வாறு எம் சந்ததிக்கு எடுத்து வருவது என்று சிந்தித்தபோது கிடைத்த ஆயுதம்தான் 21ம் நூற்றாண்டு. ராஜதமிழில் இருந்த உரையாடல்களை இலகுதமிழில் அவுஸ்ரேலிய உதாரணங்களுடன் உருவாக்கியிருக்கிறேன். கதாபாத்திரங்களில் களை சற்றும் குறையாமல், நாடகத்தமிழில் என் அறிவுக்கு எட்டியவரை விளையாடியிருக்கிறேன் என்றுதான் சொல்லவேண்டும். நடிகர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை, இரவும் பகலும் இடைவிடாது முயன்று உரையாடல்களை பயின்று இன்று அரங்கேறுகிறார்கள். மூலக்கதையிலிருந்து சில சம்பவங்கள் இந்த அரங்கிற்கேற்ப மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன, ஆனால் கதையின் தனித்துவம் சிதைக்கப்படவில்லை.
வெண்ணிப்பரந்தலையில் இடம்பெற்ற போரில் கரிகாலசோழன் சேரனையும் பாண்டியனையும் தோற்கடித்து வெற்றி மயக்கத்திலே அரண்மனைக்குச் செல்கின்றான். அப்போது, அங்கே வருகின்ற 'பொன்னி' என்கின்ற புலவி, கரிகாலன் போர்தர்மங்களை மீறினான் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறாள். உண்மையை அறிய விரும்புகின்ற கரிகாலன் மாறுவேடத்தில் வந்து பொன்னியிடம் நடந்த விடயங்களை அறிந்து கொள்கின்றான். சேரனின் மார்பிலே பாய்ச்சிய வாள் முதுகைத் துளைத்து வெளியேறுவதை சுட்டிக்காட்டிய பொன்னி போரினால் ஏற்படுக்கின்ற சேதங்களையும் அழிவுகளையும் எடுத்துரைக்கின்றாள். தன் தவறினை உணந்துகொள்ளும் கரிகாலன் பொன்னியை தன் அவைப்புலவராக பணியாற்றுமாறு கேட்கின்றான். அவனுடைய வேண்டுகோளை மறுக்கும் பொன்னி, தன் காதலின் நினைவுகளை அசைபோடவும் தமிழுக்கு தொண்டாற்றவும் விடைபெற்றுக்கொள்கிறாள்.
சற்றே மாறுபட்ட கருவினைக் கொண்டு இந்த நாடகத்தினை உருவாக்க பல காரணங்கள் உண்டு. எங்கள் தமிழ்ச்சங்கம் பற்பல புதுமுயற்சிகளை மேற்கொண்டு வெற்றியும் பெற்றிருக்கிறது. உதாரணமாக குழந்தைகள் நடனத்தை பல்கலைக்கழக நிகழ்வொன்றில் மாபெரும் அளவில் அரங்கேற்றி வரலாறு படைத்தது. தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதம்பமாலையினை தமிழும் இளைஞர்களும் சங்கமிக்கும் களமாக மாற்றிய பெருமையும் உடையது UTS தமிழ்ச்சங்கம். தமிழை வளர்க்கிறோம் என்று கூறிவிட்டு, கூடியிருந்து ஆங்கில்த்தில் உரையாடுபவர்கள் மத்தியிலே, அங்கத்தவர்கள் கூட்டங்களை தமிழிலே நடத்துகின்ற ஓரேயொரு பல்கலைக்கழக தமிழ்ச்சங்கமும் UTS தமிழ்ச்சங்கமே. இந்த வருடமும் புத்தம்புது முயற்சியாக, டில்லா என்கிற புதுமைத் தாளலயத்தை அரங்கேற்றும் வேளையிலே எடுக்கப்பட்ட மாறுபட்ட முயற்சிதான் '21ம் நூற்றாண்டில் கரிகாலன்'. நகைச்சுவையை நாடி நிற்கின்ற உலகில் 'அமைதி வேண்டும்' என்ற கருத்தை முன்வைத்திருக்கின்றோம். முள்ளின்மீது நடைபோடும் பயணத்தில் ரோஜாவைப் பறிப்பதற்கு முயன்றிருக்கிறோம். முள் குத்தும் வலியையும் தாங்கியிருக்கிறோம் ரோஜா கிடைக்கும் என்ற நம்பிக்கையில்.
மீண்டும் சந்திக்கும்வரை,
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
No comments:
Post a Comment