Friday, October 24, 2008

தீபாவளி திரைப்படங்கள்

இந்த ஆண்டு தீபாவளிக்கு வரவிருந்த திரைப்படங்கள் எல்லாம் பின்தங்கிக் கொள்ள 'ஏகன்' மற்றும் 'சேவல்' ஆகிய திரைப்படங்களே வெளிவரவிருக்கின்றன. நான் அதிகமாக எதிர்பார்த்த 'வாரணம் ஆயிரம்' வெளிவராதது கவலையாக இருந்தாலும் 14 நவம்பர் மாதம் வெளியிடப்படுவது சந்தோஷமே.

நடிகர் அஜித் நடித்து வெளிவருவதால் "ஏகன்" திரைப்படத்தை பலரும், குறிப்பாக 'தல' ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனாலும் நடன இயக்குனர் ராஜுசுந்தரம் முதன்முறையாக இயக்குகின்ற படம் என்பதால் பெரிதாக அவருடைய திறமையை மதிப்பிடமுடியாது. 100 திரைப்படங்களுக்கு மேல் நடனம் அமைத்தபோது இயக்குனர்களுடன் பணிபுரிந்த அனுபவம் நிச்சயமாக இருக்கும். இந்தப்படத்தின் பாடல்கள் யுவன் சங்கர் ராஜாவின் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி இருந்தாலும் வழமையான யுவனின் பாடல்கள்போல் பிரபல்யமாகுமா என்பது கேள்விக்குறியே. 'ஓடும்வரையில்' 'hey baby' 'hey saala' போன்ற பாடல்கள் நன்றாக இருக்கின்றன. ஆனாலும் இன்னோர் நாக்கமுக்க பாடலை எதிர்பார்க்க முடியாது.

நடிகர் பரத்தின் 'சேவல்' திரைப்படம் தீபாவளிக்கு வருகின்ற கதையம்சம் பொருந்திய திரைப்படம். குறிப்பாக தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்து வரும் ஹரியின் இயக்கத்தில் இந்தப்படம் சாதனை படைக்கும் என்றே கருதுகிறார்கள். ஜி வி பிரகாஷின் இசையும் திரைப்படத்திற்கு ஏற்ப கிராமப்புற வாசனையுடன் அருமையாக இருக்கின்றன. சிம்ரன் சிறப்பு வேடத்தில் நடித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையிலே இராமன் தேடிய சீதை படத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அருமையான, யதார்த்தமான திரைப்படம். கதாநாயகர்களை போற்றும் பாடல்கள் இல்லை, பறந்து பறந்து அடிக்கும் நடிகர்கள் இல்லை. "புதியகீதை" திரைப்படத்தில் அறிமுகமாகிய ஜெகன்ஜி இயக்கிய படம் என்றால் நம்பவேமுடியவில்லை. இதைப்போலவே அண்மையில் வந்த படங்களில் அருமையான படம் என்று குறிப்பிடக்கூடிய படம் 'ஜெயம் கொண்டான்'. வினய்யின் அருமையான நடிப்பு, லேகாவின் வில்லத்தனமான வேடம் போன்றவை பாராட்டிற்கு உரியவை. இரண்டு திரைப்படங்களையும் தன் இசையால் தாலாட்டியிருப்பவர் வித்யாசாகர்.

இவ்வளவு தூரம் தமிழ்த் திரைப்படங்களை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோமே, அவர்கள் ஈழத்தமிழர்களுக்கு என்ன செய்தார்கள் என்று கொதித்திருந்த எமக்கு இராமேஸ்வரம் சென்று தங்களையும் தமிழர்கள் என்று அடையாளம் காட்டியிருக்கும் இயக்குனர்கள். அவர்களுக்கு நன்றிகள்.

கடந்த MP3 websites பற்றிய ஆக்கத்திற்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றிகள். நிச்சயமாக உங்களுக்கு பயன்பட்டிருக்கும் என்று நம்புவோம்.

No comments: