Saturday, November 29, 2008

மும்பைத் தாக்குதலும் பத்துக் கேள்விகளும்



கனவில்கூட நினைத்துப் பார்க்காத கொடூரம் மும்பை நகரில் அரங்கேறி ஓய்ந்திருக்கிறது. ஈழத்தமிழர்களுக்கு சற்றே பழகிப்போன விடயமாக இருந்தாலும் உலக ஊடகங்களின் கவனம் இந்த விடயத்தில் ஒரேயடியாக திரும்பியதால் எங்கள் உள்ளங்களையும் கரையவைத்துவிட்ட சம்பவம் என்றே இதனைக் குறிப்பிடவேண்டும். இன்றைய தினம் இந்த அகோர (காட்டு மிராண்டி)தனமான தாக்குதல்கள் முடிவுக்கு வந்துள்ளன என்ற செய்தி கிடைத்தது. சற்றே நிம்மதியாக இருந்தாலும் மரணித்த காயமடைந்தவர்களை எண்ணி உள்ளம் பதறுகிறது.

இந்தியாவின் வர்த்தக சந்தையாகக் கருதப்படும் முமபை நகரில் யாரும் எதிர்பாராத இந்தத் தாக்குதலினால் இதுவரை 195 பேர் இறந்துள்ளதாக அவுஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தில் 2 அவுஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள், இரண்டு பேரைப் பற்றிய தகவல்கள் இதுவரை கிடைக்கப்படவில்லை. 6 அமெரிக்கர்களும் இறந்துள்ளார்கள். 295 பேர்வரை காயமடைந்துள்ளார்கள்.

சரி, இவை தகவல்களாக இருந்தாலும், அவுஸ்ரேலிய ஊடகங்கள் கேட்கின்ற கேள்விகள் சிந்திக்க வைக்கின்றன. இதனால் என்னுள்ளத்திலே எழுகின்ற பத்துக் கேள்விகள்:

  1. பாகிஸ்தானைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் இந்தியர்களை எதிரிகளாக நினைத்தால் வெளிநாட்டவர்கள் வந்து தங்குகின்ற இடங்களை ஏன் குறிவைக்க வேண்டும்? மேலை நாட்டவர்களை குறிவைத்து நடத்தப்படுகின்ற தாக்குதல்கள் வழமையாக தலிபான் அமைப்பால் நடாத்தப்படுவதால் இந்தத் தாக்குதலுக்கும் தலபான் அமைப்புக்கும் என்ன தொடர்பு?
  2. வல்லரசுகளில் ஒன்றாக கருதப்படும் இந்தியா இவ்வாறான ஓர் சிறிய விடயத்தில் எவ்வாறு கோட்டைவிட்டது? (இந்தியாவின் பாதுகாப்புத் தொழில்நுட்பம் ஈழத்தமிழர்களை குறிபார்த்துத் தாக்குகிறதாமே? )
  3. கிரிகட்டின் அறிவிக்கப்படாத தலைநகரமாக இருக்கின்ற இந்தியாவில் இனி வெளிநாட்டவர் கிரிகட் விளையாடச் செல்வார்களா? இதனால் கிரிகட் உலகிற்கு என்ன தாக்கங்கள் இடம்பெறப் போகின்றன?
  4. இந்தியாவில் outsource செய்கின்ற அவுஸ்ரேலிய நிறுவனங்கள் அவற்றை எவ்வாறு தொடரவிருக்கி்ன்றன? இதனால் இந்தியாவின் பொருளாதாரம் எவ்வாறு பாதிக்கப்படப் போகின்றது
  5. இந்தத் தாக்குதல் அமெரிக்காவின் செப்ரெம்பர் 11 தாக்குதல்களுடன் ஒப்பிடப்படலாமா?
  6. இந்தியாவில் தவித்திருந்த அவுஸ்ரேலியர்களுக்கு ஏன் உடனடி உதவிகள் செய்யப்படவில்லை ?
  7. இந்தத் தாக்குதலினால் தீவிரவாதிகள் அடைந்த பலன் என்ன? சொல்கின்ற செய்தி என்ன? மக்களைக் கொன்று சந்தோசிப்பவர்கள் நல்லெண்ணம் படைத்தவர்களாக எவ்வாறு இருக்கமுடியும்?
  8. இந்தத் தாக்குதல்களில் ஈடுபட்ட இந்த கொலைவெறியர்களுக்கு வயது இருபதுதான் இருக்கும். இந்த இளரத்தங்கள் ஏன் வெறியர்களாக மாற்றப்பட்டன? இதுதான் தீவிரவாதமா?
  9. இலங்கையில் தமிழர்களைக் கொல்வதற்கு துணைபுரியும் இந்திய இராணுவத்தால் அவர்களையே நம்பியிருக்கும் இந்தியக்குடிமக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் ஏன் தரமுடியவில்லை?
  10. 'War against terrorism' என்ற வாதம் உலகில் தீவிரவாதத்தை அடக்கவும் இல்லை, அசைக்கவும் இல்லை. இந்த மாதிரியான வெறித்தனமான நடவடிக்கைகளுக்கு என்றுதான் மக்கள் இனம் முடிவு காணப்போகிறது?

Saturday, November 22, 2008

வாழ்க்கை - ஓர் கிறுக்கல்


போராட்டமே வாழ்க்கையென்று
வாழ்பவர்கள் எத்தனையோ
வாழ்க்கையே போராட்டமாய்
மாறுயதும் ஏன்தானோ

சின்ன வயதினிலே
சிரிப்பதும் அழுவதும்
அழகென்றார் சிலர்
அன்பு காட்டவோ பலர்

பள்ளிக்கூடம் போகையிலே
பாடப்புத்தகம் பாரமென்று
சைக்கிளுக்கு அடப்பிடித்து
அழுதிட்ட நினைவுகள்

சைக்கிளும் வாங்கிவிட
ஸரைல் காட்டும் அவதிலே
சேற்றிலே வழுக்கி விழுந்து
பெற்றிட்ட விழுப்புண்கள்

ஊருக்கு ஆமி வர
ஊரே பயந்தோட
இரவோடு இரவாக
இடப்பெயர்ந்த ஞாபகங்கள்

இளமைத் துடிப்பினிலே
இரவெல்லாம் ஊர்சுற்றி
விடிந்தபின்பு வீடுவந்து
வாங்கிக்கட்டிய பொழுதுகள்

வைரமுத்தின் வரிகளிலே
தமிழ் படித்து சொல் பிடித்து
வார்த்தைகளே கிறுக்கல்களாய்
வரைந்திட்ட கவிதைகள்

கண்காணாக் காதலிக்காய்
கவிதையிலே கடிதமெழுதி
பொழுதெல்லாம் செலவாக
வரவானவானதோ குப்பைகள்

எல்லாமே கரைந்தோட
எந்திரமே வாழ்க்கையாக
ஏதோ ஒன்றேத் தேடி
எங்கெங்கோ பயணங்கள்

வாழ்க்கையின் பொருளைத்தேடி
பொருளற்ற வாழ்வைத்தேடி
காலமும் விரைகின்றது
கனவுகளும் கலைகின்றன

போராட்டமே வாழ்க்கையென்று
வாழ்பவர்கள் எத்தனையோ
வாழ்க்கையே போராட்டமாய்
மாறுயதும் ஏன்தானோ

Wednesday, November 19, 2008

காலத்தை வென்ற பாடல்

ஓர் சில பாடல்கள் கேட்கும்போது அவை உள்ளத்தைத் தொட்டுவிடுவதுண்டு. ஒரு திரைப்படம் வந்து பல ஆண்டுகளான பின்பும் அந்தப்படத்தின் பாடல்களைக் கேட்கும்போது அவை இதயத்தைத் தொட்டால் அவையே காலத்தை வென்ற பாடல்களாகும். அந்தவகையில் 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படப்பாடல்கள் காலத்தை வென்ற பாடல்களாகக் கருதப்படலாம்.

கண்டுகொண்டேன் வந்தது யாரென்று கண்டுகொண்டேன் என்கின்ற பழைய ஜெமினிகணேஷன் திரைப்படப்பாடல் வரிகளை இந்தத்திரைப்படத்தின் பெயராக்கியுள்ளார்கள். சென்ஸ் அண்ட் சென்சிபிலிடி என்ற ஆங்கில நாவலின் தழுவலாக வந்த ஆங்கிலத்திரைப்படத்தை சுட்டு ராஜிவ்மேனன் எடுத்ததிரைப்படம்தான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். ஆனாலும் இந்தத் திரைப்படத்தின் பாடல்கள் இசைப்புயலின் இசையில் மாபெரும் வெற்றிபெற்றன. குறிப்பாக 'சந்தனத் தென்றலை' என்ற பாடல் விருது பெற்றதாக ஞாபகம். ஆனாலும் காதலின் துயரத்தை, சோகத்தை, தாக்கத்தை எடுத்துரைக்கின்ற எங்கே எனது கவிதை பாடலே என்னுள்ளத்தை இன்றைய நாட்களில் கவர்ந்த பாடல். ஓர்நாள் கன்பரா பேரூந்திலே சென்றுகொண்டிருந்தபோது இந்தப்பாடல் என் ipodஇல் ஒலித்தது. பஸ்ஸிலே இருந்து கத்தாத குறை, ஆனாலும் கலாச்சாரம் பார்க்கும் கன்பராவாசிகளை நினைத்து பாடமால் விட்டுவிட்டேன்.

சரி.. விஷயத்திற்கு வருவோம். உயிரை உருக்குகின்ற வைரமுத்துவின் வரிகளை மெச்சுவதா? உணர்வு கொடுத்துப் பாடும் சின்னக்குயில் சித்ராவை பாராட்டுவதா? இடையிடையே சந்தம் சேர்க்கும் சிறினிவாஸை போற்றுவதா? இசையுடன் விடையாடும் இசைப்புயலை வணங்குவதா? ஒவ்வோர் வரியும் இரத்த நாளங்களை கிறங்கடிக்க வைக்கின்றன.

குறிப்பாக,
அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால்
அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு
நூறு முறை பிறந்திருப்பேன்
போன்ற வரிகள் காதலின் வேதனையை அழகாக சொல்கின்றன. வைரமுத்துவை மிஞ்ச இன்னோர் கவிஞன் வருவானா என்பது சந்தேகமே. வந்தாலும் இசைப்புயல் - வைரமுத்து கூட்டணி கிடைத்திடுமா?


எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை

விழியில் கரைந்துவிட்டதா
அம்மம்மா விடியல் அழித்துவிட்டதா
கவிதை தேடித்தாருங்கள்
இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை

மாலை அந்திகளில் மனதின் சந்துகளில்
தொலைந்த முகத்தை மனம் தேடுதே
வெயில் தாரொழுகும் நகர வீதிகளில்
மையல் கொண்டு மலர் வாடுதே
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில்
துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை
உருகி உருகி மனம் தேடுதே

அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால்
அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு
நூறு முறை பிறந்திருப்பேன்

விரை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
விரை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை

ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட
ஒரே தொடுதல் மனம் ஏங்குதே
முத்தம் போடும் அந்த மூச்சின் வெப்பம் அது
நித்தம் வேண்டும் என்றும் ஏங்குதே

வேர்வை பூத்த உந்தன் சட்டை வாசம் இன்று
ஒட்டும் என்று மனம் ஏங்குதே
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு
குத்தும் இன்பக் கணம் கேட்குதே கேட்குதே...

பாறையில் செய்ததும் என் மனம் என்று
தோழிக்கு சொல்லியிருந்தேன்
பாறையின் இடுக்கில் வேர் விட்ட கொடியாய்
நீ நெஞ்சில் முளைத்து விட்டாய்

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை

இதைக் கேட்டு மகிழ..
இங்கே அழுத்துங்கள்

இந்தப்பாடலை பார்த்து மகிழ..
இங்கே அழுத்துங்கள்








வெள்ளைக்காகம் உண்மையா?


காகத்தின் நிறம் கறுப்பு என்று படித்திருக்கிறோம். கறுப்பு நிறத்தில் காகம் இருப்பதனால் அதனை துன்பத்தின் அடையாளமாக பார்க்கிறோம். ஆங்கிலேயர்களுக்கும் இந்த நம்பிக்கை இருக்கிறது. ஆனால் உலகிலே வெள்ளைக்காகம் இருக்கிறதா என்ற கேள்வியைக் கேட்டார் ஒருவர். சரி, Google Searchஇல் தேடிப் பார்ப்போம் என்ற தேடினால் பல விசித்திரமான விடயங்களும் படங்களும் கிடைத்தன. வெள்ளைக்காகம் எம் கண்ணிலேபடுவது அரிது, அவற்றை நீ்ங்கள் கண்டுவிட்டால் உங்களுக்கு விசித்திரமான ஏதோவொன்று நடைபெறப்போகிறது என்று நம்புபவர்களும் உண்டு. ஆபிரிக்காவில் வெள்ளைக் கழுத்துடைய Ravens (காகத்தின் ஓர்வகை) இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அமெரிக்காவிலும் இப்படியான வெள்ளைக்காகங்கள் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். ஆனாலும் சில ஆராய்ச்சியாளர்கள் வெள்ளைக்காகம் இருப்பதை மறுத்தும் இருக்கிறார்கள்.


White crow என்ற கவிதை, தகவல் சஞ்சிகை ஒன்று வருடத்திற்கு நான்கு தடவைகள் அமெரிக்காவில் பிரசுரிக்கப்படுகின்றது. அத்துடன் வெள்ளைக்காகம் என்பது கவிஞர்கள் பலருடைய சிந்தனைகளையும் தூண்டிவிட்டிருக்கிறது. அதேபோல விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட ஆக்கங்களில் 'வெள்ளைக்காகம்' என்ற வார்த்தை நடக்கமுடியாத விடயங்களை எடுத்துக்காட்டுவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.


காதல் சடுகுடு படத்தில் விக்ரம் சொல்வதுபோல் ' வெள்ளைக்காகத்துடன் குஞ்சும் பறந்தது' என்றால் நம்பத்தான் வேண்டும். நீங்களும் வெள்ளைக் காகத்தைப் பார்த்து இருந்தால் எனக்கு அறியத்தாருங்கள்.

Thursday, November 13, 2008

சிலந்தி விற்று கடன் கட்டலாமா

உங்களுக்குக் கடன் தொல்லையா? கடன்கட்ட சிலந்தி விற்ற கதை இதுதான. படித்துப் பாருங்கள், படிக்க மட்டும்தான், பரீட்சித்துப் பார்க்க இல்லை..



Tuesday, November 11, 2008

அழைப்பு = வைரமுத்துவின் கவிதை

கவிதைகளைக் கொள்ளையடிப்பதனால் (?) நான் கவிதைத் திருடன் ஆகிறேன். ஆனாலும் என்ன செய்ய? வைரமுத்துவின் வரிகளை நான் பிரசுரிக்காமல் யார் பிரசுரிப்பது. கவிதையை படியுங்கள், ரசியுங்கள், உங்கள் பாராட்டுக்கள் வைரமுத்துவுக்கும் நான் கவிதையைப் பெற்றுக்கொண்டவருக்கும்(சுட்டுக் கொண்டவருக்கும்?) சேரட்டும். இதோ கவிதை....


தயவுசெய்து
என்னை தொல்லைசெய்!

தயவுசெய்து
என்னை கொள்ளையடி

கழுத்தடியில்
ஒரு
செல்ல கடி கடி

கூந்தல் கலைத்து
பூக்களை உதிர்த்துவிடு

ஓடிப்பிடித்து
என்னை உருக்குலைத்து
போடு

குளித்துவரும்
என்னை மீண்டும்
அழுக்காக்கு

எதிர்பாரா இடத்தில்
என்னை தீண்டு

எவ்வளவு இயலுமோ
அவ்வளவு தழுவு

எங்கே என் உயிர் எண்டு
கண்டு பிடி

அதன்
இட வலம் தொடு

இது தான்
இது தான் நான் கேட்டது

உதட்டு எச்சிலால்
உடல் பூசு

முத்தமிட்டு
என் மூச்சை
நிறுத்து

இது ஒன்றும்
ஒரு வழிப்பாதையல்ல
என் பங்கு செலுத்த
எனக்கும் இடம் கொடு

அங்கங்கே பரவு

எலும்பின் மச்சைகளின்
ஊருடுவு

மார்பக பள்ளத்தில்
முகம் வைத்து மூச்சுவிடு

மேகங்களுக்கு இடையில்
நட்சத்திரம் தூங்கினாலும்

இலைகளுக்கு இடையில்
காற்று தூங்கினாலும்

என் கண்கள்உனக்காக
இரவெல்லாம்
விழித்திருக்கும்

உனக்கில்லாத உரிமையா?

பூனையின் பாதம்
பொருத்தி
பொசுக்கெண்டு வந்து
புடவையிழு!

தீவிரத்தால் என்னை
திணறவை

என்னை தீண்டி விட்டு
எங்கேனும் ஒழிந்து கொண்டு
நித்தம் ஒரு தடவை
என்னை அழவை

என் பெண்மையின்
பரிபூரணமே!

என்
வெற்றிடம் வழியே
நிறைந்த நிறைவே

தாழாத தணங்கள்
தாழ்ந்தன உனக்காக!

ஆகாய கங்கை
பாய்ந்தது
உனக்காக
வா

என்னை வலி செய்
உயிர் பருகி என்னை
ஒலிசெய்

என்னுயிர் பயிராகும்
நீ பதித்த பள்ளத்தில்

எனக்குள்ளே பூப்பொழியும்
நீ முட்டும் அதிர்வில்

உன் நகர்த்தலுக்காக
துடிக்குது என் ஆடை

உன் நகம்
கிழிக்க
வீங்குது என் மார்பு!

தொட்டுக்கொண்டுறங்கும்
சுகம் ஒண்டு கருதி
உடல் என்ற உலையில்
கொதிக்குது என்குருதி!

நீ தந்த சுகம் எல்லாம்
நெற்றியில் தீ எரியும்
தியானத்தில்
வந்ததில்லை

வில்லாய் விறைக்கும்
கலவியில் கண்டதில்லை
பிரசவம் முடிந்த
பெரு மூச்சில்
கண்டதில்லை

எங்கே
மீண்டும் ஒரு முறை
முந்தானைக்குள் புகுந்து
முயல் குட்டியாகு!

தட்டாதே
தாய் சொல்லை கேள்
பத்துமாதம்
என் வயிறு சுமந்த
பிஞ்சு பிரப்ஞ்சமே!

-வைரமுத்து-

Friday, November 07, 2008

முதல் முதலாய் அம்மாவுக்கு...


என் மனதைக் கவாந்த கவிதை வைரமுத்துவின் கவிதையொன்று... இதனை சுட அனுமதித்த நண்பருக்கு நன்றி. இந்தக் கவிதையிலே வைரமுத்துவின் கவிஞன் என்ற இறுமாப்பும் ஓர்வித வெறுப்பும் தெரிகிறது. படித்துப்பாருங்கள்.


ஆயிரம் தான் கவி சொன்னேன்
அழகழகாக பொய் சொன்னேன்
பெத்தவளே உன் பெருமை
ஒத்தவரி சொல்லலையே...

காற்றெல்லம் மகன் பாட்டு
காகிதத்தில் அவன் எழுத்து
ஊரெல்லம் மகன் பேச்சு
உன் கீர்த்தி எழுதலையே...

எழுதவோ படிக்கவோ...
ஏலாத தாய் பற்றி
எழுதியென்ன லாபம் எண்டு
எழுதாம போனேனோ?

பொன்னையாத்தேவன் பெத்த
பொன்னே குலமகளே...
என்னை புறம் தள்ள
இடுப்பு வலி பொறுத்தவளே...

வைரமுத்து பிறப்பான் எண்டு
வயித்தில் நீ சுமந்ததில்லை...
வயித்தில் நீ சுமந்ததொன்னு
வைரமுத்து ஆகிருச்சு...

கண்ணு காது மூக்கோடு
கறுப்பா ஒரு பிண்டம்
இடப்பக்கம் கிடக்கையில
என்னன்னு நினைச்சிருப்ப...?

கத்தி எடுப்பவனே...?
களவாட பிறந்தவனோ...?
தரணி ஆள வந்திருக்கும்
தாசில்தார் இவன் தானோ...?
இந்த விவரங்கள்
ஏதொன்னும் தெரியாம
நெஞ்சூட்டி வளர்த்த உன்னை
நினைச்சா அழுகை வரும்...

கத கதன்னு
களிக்கிண்டி
களிக்குள்ள குழி வெட்டி
கருப்பட்டி நல்லெண்ணை
கலந்து தருவாயே...

தொண்டையில
அது இறங்கும்
சுகமான இளஞ்சூடு
மண்டையில இன்னும்
மச மசன்னு நிக்குதம்மா...

கொத்தமல்லி வறுத்து வைச்சு
குறுமிளகாய் இரண்டு வைச்சு
சீரகமும் சிறுமிளகும் சேர்த்துவைச்சு
நீர் தெளிச்சு
கும்மி அரைச்சு
நீ கொழ கொழன்னு வடிக்கையில
அம்மி மணக்கும்
அடுத்த தெரு மண மணக்கும்...

தித்திக்க சமைச்சாலும்
திட்டிக்கிட்டே சமைச்சாலும்
கத்தரிக்காய் நெய் வடியும்
கருவாடு தேன் ஒழுகும்...

கோழிக்குழம்பு மேல
குட்டி குட்டியா மிதக்கும்
தேங்காய்ச்சில்லுக்கு
தேகமெல்லம் எச்சி ஊறும்...

வறுமையில நாம பட்ட
வலிதாங்க மாட்டாம
பேனா எடுத்தேன்
பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்.

பாசம் உள்ள வேளையில
காசு வந்து கூடலையே...
காசு வந்த வேளையில
பாசம் வந்து சேரலையே...

கல்யாணம் நான் செய்து
கதியற்று நிக்கையிலே
பெத்த அப்பன் சென்னை வந்து
சொத்து எழுதி போன பின்னே...

அஞ்சாறு வருசம்
உன் ஆசைமுகம் பாக்காம
பிள்ளை மனம் பித்தாச்சே
பெத்த மனம் கல்லாச்சே...

படிப்பு படிச்சுகிட்டே
காசு அனுப்பி வைச்ச மகன்
கைவிட மாட்டான்னு கடைசிவரை
நம்பலையே....

பாசம் கண்ணீர்
பழையகதை எல்லாமே
வெறிச்சோடிப்போன வேதந்தம்
ஆகிருச்சே...

வைகையில ஊர் முழுக
வல்லூரும் சேர்ந்தழுக
கைப்பிடியா கூட்டி வந்து
கரைசேத்து விட்டவளே!

எனக்கொன்னு அனதுன்னா
உனக்கு வேற பிள்ளையுண்டு...
உனக்கு எதும் ஆனதுன்னா
எனக்கு வேற தாயிருக்கா?

-வைரமுத்து-

Thursday, November 06, 2008

தூரத்து நிலவு.. வானலையில் பத்து வாரம்..


சிட்னியிலிருந்து கன்பரா வந்ததும் என்ன செய்வது என்று ஒரே குழப்பம். நண்பர்களும் பெரிதாக இல்லை, பல்கலைக்கழகத்திலும் படிப்பதற்கென்று பெரிதாக இல்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தபோது வந்த ஐடியாதான் 'தூரத்துநிலவு'. இன்பத்தமிழ் ஒலியில் வாரந்தோறும் ஒலிபரப்பும்வகையில் நிகழ்ச்சி செய்யவதாக திட்டம்.

நிகழ்ச்சிக்கு நல்லதோர் பெயர் தேவை. யோசித்து யோசித்து மூளை களைத்துவிட்டது. அப்போதுதான் வானத்திலே தெரியும் நிலவு கண்களுக்கு இதமளிக்க ( அடடா... ) அதைப்பார்த்து கிடைத்ததுதான் இந்தப்பெயர். சும்மா விளையாட்டாக ஏதோ என்ட மடிக்கணணில (தூயதமிழ் ?...) இருந்த நாலு பாட்டுகளைப் போட்டு அடோபி மென்பொருளில் பதிவு செய்தேன். சுமார் ரகமாக அந்த ஒலிப்பதிவு அமையவே ஒரு மணிநேர வானொலி நிகழ்ச்சியை செய்து முடித்தேன். இன்பத்தமிழ் ஒலியில் செவ்வாய்க்கிழமைகளில் ஒலிபரப்பவும் ஏற்பாடு செய்து இந்த வாரத்துடன் பத்தாவது கிழமை நிறைவு பெறுகிறது.

புதிய திரைப்படப் பாடல்களை அவுஸ்ரேலியவில் வானொலிகள் ஒலிபரப்புவது குறைவு என்ற குறைபாடு இருந்து வருகிறது (கேட்பவர்கள் இன்னும் சிவாஜி காலத்திலேயே இருக்கினம்). இதனை நிவர்த்தி செய்ய புதிய பாடல்களையே பெரும்பாலும் ஒலிப்பரப்ப தெரிவுகின்றேன். ( தெரிந்தது புதுப்பாட்டுகள் மட்டும்தான், அதற்குத்தான் சும்மா பில்ட்அப்) அத்துடன் அந்தப்பாடல்கள் தொடர்புடைய விபரங்களையும் சேர்த்துக் கொள்கின்றேன்.

சனத்துக்கு பிடிக்குமோ என்ற கவலையும் இருந்தது, பலரும் இந்த நிகழ்ச்சியைக் (விரும்பி) கேட்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள். இணைய நேயர்களும் நண்பர்களும் கேட்பதற்காக மேலேற்றம் ( uploadக்குத் தமிழ் ?) செய்துள்ளேன். தரையிற்க்கம் செய்து கேட்டுப்பாருங்கள். வலது பக்கத்தில radio அழுத்த வேணும். சும்மா ஒரு பாட்டு download பண்ணுற நேரத்தில முடிஞ்சிடும். உங்கள் கருத்துக்கள் நிச்சயமாக மேலும் பல நிகழ்வுகளையும், ஏன் இந்த நிகழ்ச்சியையே தொடர்ந்து செய்ய உற்சாகம் கொடுக்கும்.

இலங்கை வானொலி நிகழ்வு மாதிரி இல்லாம, நிச்சயமாக வித்தியாசமாக இருக்கும் என்று நம்புகிறேன். வருகின்ற வாரங்களில் கவிதைகளையும் சுவாரஸ்யமான தகவல்களையும் சேர்க்கலாம் என்று இருக்கிறேன் (நேரம் கிடைக்க வேணுமே)

கேட்டவங்களுக்கு நன்றி... மீண்டும் இன்னொரு பதிவில சந்திப்போம்.

Sunday, November 02, 2008

நடிகர் சங்கம், தமிழக, மெல்பண் தமிழர்களின் ஒற்றுமை சிலிக்க வைக்கிறது

கார்த்திகை முதலாம் நாள், தீபாவளி கடந்து சோகங்கள் எல்லாம் தீயிலே எரிந்து ஒற்றுமை என்னும் தீபம் ஏற்றியிருக்கிறார்கள் தமிழர்கள். இன்றைய நாள், மாபெரும் நிகழ்வாக தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் "ஈழத்தமிழர்களுக்கு" ஆதரவை எடுத்துக்காட்டுகின்ற நிகழ்வு (விழா?) அரங்கேறியிருக்கிறது. தமிழ் உணர்வாளர்கள், மனிதவுரிமை ஆதரவாளர்களின் முகங்கள் இந்த நிகழ்வை நிறைத்திருக்கின்றன. உறவுகளுக்கு ஆதரவுக் குரல்கள் முழங்கியிருக்கின்றன. தமிழா ஒன்றுபடு என்ற கோஷங்கள் காதுகளில் கேட்டுக்கின்றன. இந்நிகழ்விலே நடிகர்கள் அஜுத் மற்றும் அர்ஜுன் ஆகியோர் கலந்து கொண்டதை அனைவரும் உன்னிப்பாகக் கவனித்தார்கள். வழமையாக எந்நிகழ்விலும் கலந்து கொள்ளாத அஜுத் போன்றோர் இந்த நிகழ்விலே கலந்து கொண்டு 'உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு' என்று பேசியது புலம்பெயர்ந்த தமிழர்கள் காட்டிய ஒற்றுமையின் விளைவா என்ற சிந்தனைகளும் எழத்தான் செய்கின்றன. அதேபோல் அர்ஜுனும் தன்னுடைய நன்றிக்கடனை தமிழர்களுக்குத் தெரிவித்திருந்தது சந்தோசத்தை அளித்தது.


நடிகர்கள் சென்னையிலே திரண்டிருந்தவேளையிலே தமிழகத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் கடையடைப்புப் போராட்டம் கவனிக்க வேண்டிய ஓர் விடயம். ஒவ்வொரு நாள் உணவிற்கும் உழைக்கின்ற இந்த உறவுகள், தம் உடன்பிறவா சகோதரர்களுக்காக தம் உணவை, உழைப்பைப் பற்றிக்கூட கவலைப்படாதது உண்மையிலே புல்லரிக்கவைத்தது.



இந்தியாவி்ல் இவ்வாறு குரல்கள் எழுகின்றவேளையிலே, அவுஸ்ரேலியாவில் தமிழ் இளையோர்கள் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடாத்தியிருப்பது எம்மைப் பெருமைப்படுத்தியிருக்கிறது. குறுகிய காலத்திலே ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வாக இருந்தாலும் அழகாக, நேர்த்தியாக இருந்தது. இளைய குரல்கள் தொடர்ந்தும் ஒலிக்க வேண்டும். மெல்பண் இளையோர்கள் உணர்வற்றவர்கள் இல்லை என்று நிருபிக்க வேண்டும்.


இவ்வாறாக, உலகத்தமிழர்கள் ஒருங்கிணைந்திருப்பது எம் இரத்தங்களில் நம்பிக்கையைப் பாய்ச்சி இருக்கின்றன. உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு இதை உரக்கச் சொல்வோம் உலகிற்கு. மொழி வென்றாக இனம் ஒன்றாக புதுவழியை எடுப்போம் விடிவிற்கு.