Sunday, November 02, 2008

நடிகர் சங்கம், தமிழக, மெல்பண் தமிழர்களின் ஒற்றுமை சிலிக்க வைக்கிறது

கார்த்திகை முதலாம் நாள், தீபாவளி கடந்து சோகங்கள் எல்லாம் தீயிலே எரிந்து ஒற்றுமை என்னும் தீபம் ஏற்றியிருக்கிறார்கள் தமிழர்கள். இன்றைய நாள், மாபெரும் நிகழ்வாக தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் "ஈழத்தமிழர்களுக்கு" ஆதரவை எடுத்துக்காட்டுகின்ற நிகழ்வு (விழா?) அரங்கேறியிருக்கிறது. தமிழ் உணர்வாளர்கள், மனிதவுரிமை ஆதரவாளர்களின் முகங்கள் இந்த நிகழ்வை நிறைத்திருக்கின்றன. உறவுகளுக்கு ஆதரவுக் குரல்கள் முழங்கியிருக்கின்றன. தமிழா ஒன்றுபடு என்ற கோஷங்கள் காதுகளில் கேட்டுக்கின்றன. இந்நிகழ்விலே நடிகர்கள் அஜுத் மற்றும் அர்ஜுன் ஆகியோர் கலந்து கொண்டதை அனைவரும் உன்னிப்பாகக் கவனித்தார்கள். வழமையாக எந்நிகழ்விலும் கலந்து கொள்ளாத அஜுத் போன்றோர் இந்த நிகழ்விலே கலந்து கொண்டு 'உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு' என்று பேசியது புலம்பெயர்ந்த தமிழர்கள் காட்டிய ஒற்றுமையின் விளைவா என்ற சிந்தனைகளும் எழத்தான் செய்கின்றன. அதேபோல் அர்ஜுனும் தன்னுடைய நன்றிக்கடனை தமிழர்களுக்குத் தெரிவித்திருந்தது சந்தோசத்தை அளித்தது.


நடிகர்கள் சென்னையிலே திரண்டிருந்தவேளையிலே தமிழகத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் கடையடைப்புப் போராட்டம் கவனிக்க வேண்டிய ஓர் விடயம். ஒவ்வொரு நாள் உணவிற்கும் உழைக்கின்ற இந்த உறவுகள், தம் உடன்பிறவா சகோதரர்களுக்காக தம் உணவை, உழைப்பைப் பற்றிக்கூட கவலைப்படாதது உண்மையிலே புல்லரிக்கவைத்தது.



இந்தியாவி்ல் இவ்வாறு குரல்கள் எழுகின்றவேளையிலே, அவுஸ்ரேலியாவில் தமிழ் இளையோர்கள் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடாத்தியிருப்பது எம்மைப் பெருமைப்படுத்தியிருக்கிறது. குறுகிய காலத்திலே ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வாக இருந்தாலும் அழகாக, நேர்த்தியாக இருந்தது. இளைய குரல்கள் தொடர்ந்தும் ஒலிக்க வேண்டும். மெல்பண் இளையோர்கள் உணர்வற்றவர்கள் இல்லை என்று நிருபிக்க வேண்டும்.


இவ்வாறாக, உலகத்தமிழர்கள் ஒருங்கிணைந்திருப்பது எம் இரத்தங்களில் நம்பிக்கையைப் பாய்ச்சி இருக்கின்றன. உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு இதை உரக்கச் சொல்வோம் உலகிற்கு. மொழி வென்றாக இனம் ஒன்றாக புதுவழியை எடுப்போம் விடிவிற்கு.

No comments: